தமிழக அரசின் 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து ஆர்.என் ரவிக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. மாநிலத்தால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றமானது மாநில ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலநிர்ணயம் செய்து உத்தரவிட்டது.
இதனிடையே அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தில் 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்தை உயர்த்துவது உள்ளிட்ட 9 மசோதாக்களுக்கு கடந்த மாத இறுதியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மேலும் 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உள்ளாட்சி அமைப்பு சிறப்பு அதிகாரிகளில் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா, தமிழ்நாடு ஊராட்சிகள் ஐந்தாம் திருத்தச் சட்டமசோதா, தமிழ்நாடு தொழிற்கல்வி நிலையங்களில் சேர்க்கை திருத்தச் சட்ட மசோதா ஆகியவைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.