For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மசோதாக்களை கால வரம்பின்றி கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - உச்ச நீதிமன்றத்தில் கேரளா வாதம்!

மசோதாக்களை கால வரம்பின்றி கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லைஎன உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வாதிட்டுள்ளது.
08:33 PM Sep 09, 2025 IST | Web Editor
மசோதாக்களை கால வரம்பின்றி கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லைஎன உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வாதிட்டுள்ளது.
மசோதாக்களை கால வரம்பின்றி கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை   உச்ச நீதிமன்றத்தில் கேரளா வாதம்
Advertisement

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்த விவகாரம் மற்றும் குடியரசு தலைவர் விளக்கம் கோரிய மனு தொடர்பான வழக்கு இன்று 8 வது நாளாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வில் விசாரித்தது.

Advertisement

அப்போது கால வரம்பு நிர்ணயம் செய்ததற்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியன் ஆஜரானார். அவர்,

"அரசியலமைப்பின் பிரிவு 74 ன் படி குடியரசுத் தலைவர் அமைச்சரவை பிரதம மந்திரி ஆகியோரின் ஆலோசனையின் படி தான் செயல்பட வேண்டும் என்று தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது. அதேபோலத்தான் ஒரு மாநிலத்தினுடைய ஆளுநரும் அமைச்சரவை ஆலோசனையின் படி செயல்பட முடியும். குறிப்பாக மசோதா ஒப்புதல் விவகாரங்களை பொருத்தவரை அரசியல் சாசனம் பிரிவு 200 வழங்கியுள்ள நடைமுறைகளை மட்டும் தான் அவர் கடைபிடிக்க முடியுமே தவிர அதனை மீறி செயல்பட முடியாது. அரசியல் சாசனப் பிரிவு 74 ன் படி குடியரசுத் தலைவரும் அமைச்சரவை மற்றும் அதன் தலைவரான பிரதமருடைய அறிவுரை மற்றும் ஆலோசனைப்படி செயல்பட முடியும். அந்த வகையில் அரசியல் சாசனப் பிரிவு 143ன் கீழ் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரிய குடியரசு தலைவரின் முடிவு என்பது தன்னிச்சையாகவோ, தனது விருப்புரிமையின்படியோ எடுத்தது அல்ல, ஏனெனில் தன்னிச்சையாக விளக்கம் கோர குடியரசு தலைவருக்கு அரசியல் சாசனத்தில் அதிகாரம் வழங்கப்படவில்லை. மேலும் உச்சநீதிமன்றத்தினுடைய ஒரு தீர்ப்பை குடியரசு தலைவர் ரத்து செய்ய முடியாது (over ruled), அவ்வாறு மீற முடியும் என கருதுவது சரியானது அல்ல.

தொடர்ந்து கேரளா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.கே வேணுகோபால்:-

அரசியல் சாசனப் பிரிவு 200-இல் வழங்கப்பட்டிருக்கக்கூடிய வழிமுறைகளை மட்டுமே ஆளுநரால் பயன்படுத்த முடியும் அதில் கூறப்படாத விஷயங்களுக்குள் செல்ல ஆளுநருக்கு அரசியல் சாசனம் எந்த ஒரு அதிகாரத்தையும் வழங்கவில்லை. அந்த வகையில் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் "AS SOON AS POSSIBLE " என்று குறிப்பிடப்பட்டுள்ளது நாம் மறந்துவிடக்கூடாது. எனவே குறிப்பிட்ட கால அளவு வரையறுக்கப்படவில்லை எனக் கூறி மசோதாக்களை கால வரம்பின்றி கிடப்பில் போடவோ, தனது விருப்பமான நேரத்தில் முடிவெடுக்கலாம் என்றோ அரசியல் சாசனம் வழிவகை செய்யவில்லை. எந்த மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் தேவையோ அதனை மட்டும் தான் அவர் ஒதுக்க வேண்டும் பிற மசோதாக்கள் பொறுத்த வரைக்கும் அவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.  ஆளுநரும் மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் செயல்பட முடியும், அந்த வகையில் ஆளுநரால் எந்த ஒரு மசோதாவையும் கிடப்பிலேயே போட முடியாது அதற்கான அதிகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை” என்று வாதிட்டார்.

Tags :
Advertisement