"வாக்கு திருட்டு தான் மிகப்பெரிய தேசவிரோத செயல்" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று மக்களவையில் எஸ்ஐஆர் தொடர்பான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசியவர், "தேச தந்தை மகாத்மா காந்தி காதி உடையை அதிகம் விரும்பினார். சுதந்திர போரின் ஆயுதமாக அதை ஏன் அவர் மாற்றினார் என யாருக்காவது தெரியுமா? ஏனென்றால் காதி என்பது வெறும் உடை அல்ல, அது இந்தியர்களின் உணர்வுகளுடன் பின்னி பிணைந்த ஒன்று. நாட்டின் எந்த மாநிலங்களுக்கு நீங்கள் சென்றாலும் வெவ்வேறு உடைகளை நீங்கள் பார்க்க முடியும் என கூறினார்.
இந்த மாநில மக்கள் வெறும் உடையை மட்டும் கொடுக்கவில்லை அவர்களது கலாச்சாரத்தையும் கொடுக்கிறார்கள். அதேபோல் தான் நமது ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு மிக அழகான ஒரு ஆடை. இது 140 கோடி மக்களால் ஒன்றாக சேர்த்து உருவாக்கப்பட்டது. இந்த மக்களவை, மாநிலங்களவை நாடு முழுவதிலும் உள்ள சட்டமன்றங்கள், பஞ்சாயத்து அமைப்புகள் என அனைத்துமே இங்க இருக்கக்கூடிய வாக்குரிமை என்ற ஒன்றால் மட்டுமே இருக்கின்றது.
வாக்குரிமையால் மட்டுமே இந்தியாவின் அனைத்து பெருமைகளும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் இந்த வேற்றுமையில் ஒற்றுமை என்பதை தான் ஆர்.எஸ்.எஸ் நண்பர்களுக்கு பிடிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் நண்பர்களுக்கு சமத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லை அவர்களைப் பொறுத்தவரை பிரித்தாளும் கொள்கை என்பதுதான் மிகவும் முக்கியம். இந்தியாவின் அனைத்து அமைப்புகளும் வாக்குரிமை என்ற விஷயத்தில் இருந்து தான் உருவாக்கப்பட்டது. எனவே அந்த அமைப்புகளை வாக்குரிமை மூலமாக புறவழி பக்கமாக அபகரிக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் நண்பர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
நான் சொல்லக்கூடியது கசப்பான உண்மைகள் அதை எதிர் அணியில் இருக்கக்கூடிய ஆளும் கட்சியினரால் நிச்சயமாக ஏற்க முடியாது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர்கள் எப்படி எதன் அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருக்கக் கூடியவர்கள் தான் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. சி.பி.ஐ, அமலக்கத்துறை போன்ற அமைப்புகளை கையகப்படுத்தி அதன் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்ட வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கம்.
ஆளும் பாஜக நேரடியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களில் தலையிடுகிறார்கள் அவர்களது செயல்பாடுகளில் தலையிடுகிறார்கள். இந்திய தேர்தல் ஆணையர்கள் தேர்வு குழுவில் ஏன் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீக்கப்பட்டார்? தேர்தல் ஆணையர் தேர்வு குழுவில் பிரதமர், மத்திய துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என நான் இருக்கிறேன் எனக்கு அந்த குழுவில் எந்த அதிகாரமும் இல்லை.
அவர்கள் இருவரும் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள்தான் தேர்தல் ஆணையர். ஏன் இப்படி இருக்க வேண்டும்? தேர்தல் ஆணையர் எந்த தவறு செய்தாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என சட்டபூர்வமான பாதுகாப்பை கொடுக்க சட்ட திருத்தம் என்பது கொண்டுவரப்பட்டுள்ளது. எதற்காக இதை செய்திருக்கிறீர்கள்?
பிரேசிலை சார்ந்த மாடல் அழகி இந்திய தேர்தல்களில் 22 முறை வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டை ராகுல் காந்தி முன் வைத்திருந்த நிலையில் அவரது புகைப்படத்தை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய போது காட்டினார். மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் என நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களிலும் நீங்கள் இப்படி வாக்குகளை திருடி தான் வெற்றி பெறுகிறீர்கள்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.