For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" - கிருஷ்ணசாமி பேட்டி

01:53 PM Jul 07, 2024 IST | Web Editor
 அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்    கிருஷ்ணசாமி பேட்டி
Advertisement

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி கூறியதாவது,

"மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் மக்களுக்கான வசிப்பிடத்தை அங்கேயே ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணை நாளை நடைபெறுகிறது. நேரடியாக நானே ஆஜர் ஆகி வாதாடுவதற்கான அனுமதி நீதிமன்றத்தில் கேட்கப்பட்டுள்ளது. BBTCL  நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிந்த பின்னர் தேயிலைத் தோட்டங்கள் நேரடியாக அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.

அதனை அரசு கையகப்படுத்தி அங்குள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கலாம். அசாம் உள்ளிட்ட பல மாநில தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கும் வகையில் அங்குள்ள நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டு வாழ்வாதாரம் காக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக வேலைவாய்ப்பு இல்லாமல், ஊதியம் இல்லாமல் மாஞ்சோலை மக்கள் பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மாஞ்சோலை விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உரிய முறையில் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கையை வழங்கினால் அரசு நடவடிக்கை எடுக்கும்.  தமிழ்நாடு அரசு மாஞ்சோலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டவர்களை சந்திக்க நேரிடும்.  மாஞ்சோலை மக்களின் வாழ்வாதார பிரச்னையில் தமிழ்நாடு அரசு நியாயமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் வேதனைக்குரியது. கூலிப்படையால் படுகொலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை முன் விரோதத்தால் நடந்ததாக காவல்துறை கூறியிருந்தாலும் கூலிப்படை காரணமாகவே அந்தக் கொலை நடந்துள்ளது. அண்மை காலமாக தொடர்ந்து கூலிப்படையால் கொலைகள் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

கூலிப்படையின் வேர் எங்கிருந்து வருகிறது என்று கண்டறிந்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அரசு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் தான்
கூலிப்படை உருவாகும் இடங்களாக உள்ளது.  கூலிப்படையினர் யாராக இருந்தாலும் அவர்களை வேரோடு அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

Tags :
Advertisement