பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து - செக்யூரிட்டி உயிரிழப்பு!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர்யில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு தினந்தோறும் மாணவ மாணவிகள் பள்ளி வாகனம் மூலம் அழைத்து வருவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல் இன்று காலை மாணவ மாணவிகளை ஏற்றி வந்த பள்ளி வாகனம் நெடுஞ்சாலையிலிருந்து பள்ளி வளாகத்திற்குள் திரும்பிய போது மதுரையிலிருந்து தேனி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பள்ளி வாசலில் நின்றுகொண்டிருந்த செக்யூரிட்டி திருவேங்கடசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பள்ளி வாகனத்தில் இருந்த முத்துலட்சுமி உள்பட 10 க்கும்
மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து மாணவ மாணவிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் உயிரிழந்த திருவெங்கடசாமி உடலை மீட்டு உடற்கூராய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.