"அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை முடக்க தங்கம் தென்னரசு துணை போகிறார்" - எடப்பாடி பழனிச்சாமி!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரியாபட்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "நான் ஒரு விவசாயி என்பதால் காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு 14 ஆயிரம்
கோடி நிதி ஒதுக்கீடு செய்தேன். அதற்காக முதல் கட்டமாக 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து புதுக்கோட்டையில் இந்த திட்டம் துவங்கப்பட்டது.
அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் அரசியல் கால்புணர்ச்சியின் காரணமாக விவசாயிகளுக்கு விரோதமாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு விரோதமாக நிதியமைச்சர் செயல்பட்டு வருகிறார். இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் நான்காண்டு காலமாக திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளார்.
அதிமுக கொண்டு வந்த திட்டமாக இருந்தாலும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவரது சொந்த தொகுதியில் காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்த முன்வராத நிதி அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு எம்எல்ஏவாக இருந்து என்ன பயன்? அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை முடக்க நிதியமைச்சர் தங்கம் தென்னரசு துணை போகிறார். திமுக ஆட்சி முடிய இன்னும் 7 மாத காலம் உள்ள நிலையிலும் கூட திருச்சுழி தொகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு காவிரி குண்டாறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தால் ஓரளவிற்கு இந்த தொகுதி மக்கள் உங்களை மன்னிப்பார்கள்.
இவ்வளவு பெரிய திட்டம் தமிழகத்தில் எங்குமே கொண்டு வரப்படவில்லை. இத்திட்டத்திற்கு மத்திய அரசை நான் அணுகவில்லை மாநில அரசின் நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்தேன். நான் ஒரு விவசாயி, விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். காவிரி குண்டாறு திட்டம் நிறைவேற்றப் பட்டிருந்தால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலக்காது.
மீண்டும் மக்கள் ஆதரவோடு அதிமுக ஆட்சி அமைக்கும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் காவிரி குண்டாறு திட்டத்தை நிறைவேற்றி நானே திட்டத்தை துவக்கி வைப்பேன். திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சி கடன் மேல் கடன் வாங்கி நாட்டை சீரழித்து வருகிறது.
இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. ஒருபுறம் வருவாய் அதிகமாக கிடைத்து வருகிறது. மறுபுறம் அதிக அளவில் கடன் வாங்க பெற்று வருகிறது. திமுக ஆட்சி வந்ததிலிருந்து கருணாநிதி குடும்பம் மட்டும் வளமாக உள்ளது. திமுக அரசாங்கத்தை பொருத்தவரை வீட்டு மக்களுக்கான அரசாக செயல்படுகிறது, அதிமுகவை பொறுத்தவரை நாட்டு மக்களுக்கான அரசாக செயல்படும்.
திமுக என்பது கார்ப்பரேட் கம்பெனியாக உள்ளது. மன்னராட்சி எப்போதோ இந்தியாவில் ஒழிக்கப்பட்டது, ஆனால் கலைஞர் குடும்பத்தினரால் மன்னராட்சி நடத்த முயற்சி நடந்து வருகிறது. கட்சியில் உள்ள மூன்று முக்கிய பதவிகளை கருணாநிதியின் குடும்பத்தினரிடம் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தாலும் கருணாநிதி குடும்பத்தாரே முதலமைச்சராக முடியும் என்ற நிலை உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு கான்கிரீட் கட்டிக் கொடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.