அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் தூதர்... வெளியுறவுத்துறை கண்டனம்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது குறித்து ஜெர்மன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ள கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், கடந்த மார்ச் 21-ம் தேதி கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், மார்ச் 22-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அத்துடன் மார்ச் 28-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அவரை ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. கெஜ்ரிவாலை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிய நிலையில் 6 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெர்மன் துணைத்தூதரும், செய்தித் தொடர்பாளருமான ஜார்ஜ் என்ஸ்வெய்லர்,
“இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கொள்கைகள் தொடர்பான தரநிலைகளும் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் கருதுகிறோம். குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவரையும் போலவே, கெஜ்ரிவாலுக்கும் நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைக்கு உரிமை உண்டு. இதில் அவர் கட்டுப்பாடுகள் இல்லாமல் கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்த முடியும். குற்றமற்றவர் என்ற அனுமானம் சட்டத்தின் ஆட்சியின் மையக் கூறாகும். அது அவருக்கும் பொருந்த வேண்டும்.” என்றார்.
ஜெர்மனியின் இந்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லியில் உள்ள ஜெர்மன் தூதரகத்தின் துணைத் தலைவர் ஜார்ஜ் என்ஸ்வீலர், இன்று (மார்ச் 23) வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு நேரில் அழைக்கப்பட்டு, இந்தியாவின் உள் விவகாரங்களில் அப்பட்டமான தலையீட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
India protests German Foreign Office Spokesperson's comments:https://t.co/0ItWQCRpyF pic.twitter.com/JXoiPnoXvd
— Randhir Jaiswal (@MEAIndia) March 23, 2024