For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வங்க தேசத்தில் வன்முறைகளுக்கு இடையே இன்று பொதுத்தேர்தல்! இந்தியாவை சேர்ந்த 3 பேர் உள்பட 125 வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிப்பு!

08:47 AM Jan 07, 2024 IST | Web Editor
வங்க தேசத்தில் வன்முறைகளுக்கு இடையே இன்று பொதுத்தேர்தல்  இந்தியாவை சேர்ந்த 3 பேர் உள்பட 125 வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிப்பு
Advertisement

வங்க தேசத்தில் எதிர்கட்சிகளின் வன்முறைகளுக்கு இடையே இன்று பொதுத்தேர்தல் நடைபெறும் நிலையில், இந்தியாவை சேர்ந்த மூவர் உள்பட 125 வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

வங்காளதேசத்தில் இன்று (07.01.2024) பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் தொடர்ந்து 4-வது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவி அதன்பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையினை பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் நிராகரித்தது.

இதனையடுத்து முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா (78) அறிவித்தார்.

எனவே சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கருதி கலீதா வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சிட்டகாங், காசிபூர் நகரில் வாக்குச்சாவடி மையங்களாக அமைக்கப்பட்ட 5 பள்ளிக்கூடங்களுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். அங்குள்ள தீயணைப்பு சேவை புள்ளிவிவரங்கள்படி கடந்த 16 மணி நேரத்தில் 14-க்கும் மேற்பட்ட தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்திய எல்லையான பெனாபோலில் இருந்து சென்ற பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 4 பேர் உடல் கருகி பலியாகினர். இந்த சம்பவத்துக்கு பயங்கரவாதிகள் காரணமா? அல்லது எதிர்க்கட்சியின் வன்முறையில் ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மூவர் உட்பட 125 வெளிநாட்டு பார்வையாளர்கள் பொதுத்தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 350 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 300 தொகுதிகளுக்கு காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, தேர்தலுக்குப் பிந்தைய நாடாளுமன்ற கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் அவற்றுக்கான நியமனம் நடைபெறும்.

சுமார் 2,000 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், அவர்களில் 5.1% பெண்கள். உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிவடைய உள்ளது. வாக்குப்பதிவு முடிந்த வேகத்தில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி, திங்கள்கிழமை காலை முதலே முடிவுகள் வெளியாக உள்ளன.

Tags :
Advertisement