அதானியை சந்தித்து வாழ்த்து பெற்ற குகேஷ்!
உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் குகேஷ் தொழிலதிபர் கௌதம் அதானியை சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்ட தமிழக வீரர் குகேஷ், சீன நாட்டைச் சேர்ந்த போட்டியாளர் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியம் பட்டம் பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியம் பட்டம் பெற்ற முதல் இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு ஆளுநர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் டிச.17 ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் குகேஷை பாராட்டினர். மேலும், தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.5 கோடி பரிசுத்தொகைக்கான காசோலையையும் குகேஷ் மற்றும் அவரது பெற்றோரிடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் உலக பணக்காரர்களில் ஒருவரும், இந்திய தொழிலதிபருமான கௌதம் அதானியை சந்தித்து குகேஷ் வாழ்த்து பெற்றுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை கௌதம் அதானி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.