பாலியல் வன்கொடுமை மற்றும் ஆள்கடத்தல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!
கர்நாடக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவுமான ஹெச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் களமிறங்கினார். கடந்த 26-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இதனை அடுத்து 25 வயதான பெண் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது வீட்டில் வேலை செய்த 48 வயதான பெண்ணும் புகார் அளித்ததால் பிரஜ்வல் மீதும், அவரது தந்தை ரேவண்ணா மீதும் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே ஆபாச வீடியோக்கள் வெளியான அன்றே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி சென்றதாக சொல்லப்படுகிறது. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. எனினும், அவர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், குற்றச்சாட்டு முன்வைத்த பெண்ணை கடத்தியதாக கே.ஆர் நகர் காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ஹெச்.டி.ரேவண்ணா மீது கடத்தப்பட்ட பெண்ணின் மகன் புகார் அளித்தார். இதனை அடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணைக் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஹெச்.டி.ரேவண்ணா மீது வெள்ளிக்கிழமை மைசூரு கே.ஆர். நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது பதியப்பட்ட இரண்டாவது வழக்கு இது. இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 376(2)(N), 506, 354A(1), 354(B), 354(c) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அந்தப் பெண் ரேவண்ணாவில் வீட்டில் சுமார் ஐந்து ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் வேலையில் இருந்து நின்றுவிட்டார். இந்த நிலையில், கடந்த ஏப்.26-ம் தேதி ஹெச்.டி.ரேவண்ணாவின் நெருங்கிய உதவியாளர் சதீஸ் தனது தாயாரை அழைத்துச் சென்றதாகவும், அதேநாளில் அவர் வீட்டுக்கு வந்து விட்டார். ஆனால் ஹெச்.டி.ரேவண்ணாவின் ஆள் மீண்டும் ஏப்.29-ல் தாயை அழைத்துச் சென்றார். அதன்பிறகு தனது தாயார் வீடு வந்து சேரவில்லை என்று கடத்தப்பட்ட பெண்ணின் மகன் குற்றம்சாட்டியிருந்தார். இதனை அடுத்து, கடத்தப்பட்ட பெண்ணை சிறப்பு புலனாய்வு குழுவினர் கண்டுபிடித்தனர்.
இதனிடையே, இந்த பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுவதில் இருந்து இடைக்காலத் தடை கோரி ரேவண்ணா தாக்கல் செய்திருந்த மனுவை உள்ளூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் தேவகவுடா வீட்டில் வைத்து அவரது மகனும், பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையுமான ரேவண்ணா சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டார்.