பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான்!
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மஹாராஷ்டிராவின் முக்கிய தலைவர் அசோக் சவான், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் முன்னாள் எம்எல்சி அமர் ராஜூர்கரும் பாஜகவில் இணைந்தார்.
மகாராஷ்டிராவின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அசோக் சவான். இவர் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் சங்கர் ராவ் சவானின் மகன். இவர் அம்மாநில அமைச்சராகவும், இரண்டு முறை முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் ஆதர்ஷ் வீட்டு வசதி மோசடியில் ஈடுபட்டதாக 2010-ம் ஆண்டு முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில், அசோக் சவான் நேற்று (பிப். 12) காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிலிந்த் தியோரா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியிலும், பாபா சித்திக்கி, அஜித் பவாரின் கட்சியிலும் இணைந்தனர். இதனிடையே, அசோக் சவான் காங்கிரஸில் இருந்து விலகியதோடு, பாஜகவிலும் இணைவது சிக்கலை ஏற்படுத்துகிறது.
இது குறித்து, அசோக் சவான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் இன்று மும்பையில் உள்ள பாஜக அலுவலகம் சென்று அக் கட்சியுடன் இணைகிறேன். இன்று எனது அரசியல் வாழ்க்கையின் புதிய ஆரம்பம். மேலும் பாஜகவில் நான் இணையும்போது என்னுடன் மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேவேந்திரா பட்னாவிஸ், மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலர் உட்பட பலர் இருப்பார்கள்"என்று அவர் கூறினார்.
இந்நிலையில், மும்பையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வந்த அசோக் சவான் பாஜகவுடன் தன்னை இணைத்து கொண்டார். மேலும் இவருடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்சி அமர் ராஜூர்கரும் பாஜகவில் இணைந்தார்.