Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லி | முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது திரவம் வீசி தாக்குதல்!

08:13 PM Nov 30, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, மர்ம நபர் ஒருவர் திரவம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில், தனது ஆதரவாளர்களுடன் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது திரவம் ஒன்றை ஊற்றியுள்ளார். உடனே கெஜ்ரிவாலின் ஆதரவாளர்கள் அந்த நபரை பிடித்து தாக்கியுள்ளனர். அந்த நபர் அசோக் ஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து இந்த சம்பவத்தின் பின்னணியில் பாஜக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டினார். மேலும் இதுகுறித்து, “டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மத்திய அரசும், உள்துறை அமைச்சரும் எதுவும் செய்யவில்லை” என தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் தெரிவித்ததாவது;

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஒவ்வொரு அரசியல் வியூகமும் தோற்றுப் போய்விட்டது. இப்போது அவர் பழைய தந்திரங்களுக்குத் திரும்பியுள்ளார். அதில் ஒன்றுதான் இந்த திரவ வீச்சு சம்பவம். போனமுறை மை வீசப்பட்டது. இந்தமுறையும் அப்படித்தான் நடந்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் இன்று என்ன புதிய விளையாட்டைத் தொடங்கினார் என்பதை அவரே சொல்ல வேண்டும். சந்தேக நபரை விசாரித்து உண்மையைக் கண்டறியுமாறு டெல்லி காவல்துறையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அரசியல் பிரச்சாரங்களில் பாஜக ஒருபோதும் அச்சுறுத்தல்கள் அல்லது வன்முறையின் பாதையை கையில் எடுத்ததில்லை” என தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தை விமர்சித்த ஆம் ஆத்மி, “நாட்டின் தலைநகரில் முன்னாள் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால், சாதாரண மனிதனின் கதி என்ன,” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

கடந்த முறை நடந்தது என்ன?

கடந்த 2016ஆம் ஆண்டு, அரவிந்த் கெஜ்ரிவால் ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் சென்றபோது, மாணவர் ஒருவர் அவர் மீது மை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 'அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தேச விரோதி" என்று சத்தமிட்டபடி அவர் முகத்தில் மை வீசினார். பின்னர் போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஏவிபிவி அமைப்பைச் சேர்ந்த தினேஷ் ஓஜா என தெரிய வந்தது. இதற்கு அப்போது பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால், ”என் மீது மை வீசியவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். அவர்களை நான் வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

Tags :
AAPArvind KejriwalBJPDelhiLiquid
Advertisement
Next Article