த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி!
“த்ரிஷாவின் மனம் புண்படும்படி பேசியிருந்தால், சமுக வலைதளங்களின் வாயிலாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜு தெரிவித்துள்ளார்.
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், நடிகை த்ரிஷாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு அதிமுகவை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த பிரச்னைக்கு இயக்குநர் சேரன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலர் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது. அவர் மீது தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கை அனைத்தும் உடனடியாக மேற்கொள்ளப்படும்” என த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த சர்ச்சை பெரும் பூகம்பமான நிலையில், “நான் த்ரிஷாவை பற்றி பேசவில்லை. இதை தவறாக சித்தரித்து காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை அனைவரும் கவனத்தில் வைத்து கொண்டு பரிசீலிக்க வேண்டும். த்ரிஷா என்ற நடிகையை குறிப்பிடவில்லை . த்ரிஷா அம்மாவின் மனம் புண்படும்படி பேசியிருந்தால், சமுக வலைதளங்களின் வாயிலாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என முன்னாள் அதிமுக செயலாளர் ராஜு தெரிவித்துள்ளார்.