மீனவர்கள் தொடர் கைது | மத்திய அமைச்சருடன் அண்ணாமலை சந்திப்பு!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மீனவர்களை கைது செய்வதுடன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து விடுவர். இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலும் அடைக்கப்படுவர். இதனை நிறுத்த அரசு நடவடிக்க எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் இச்சம்பம் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர் கைது விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15 மீனவர்களும் அண்ணாமலை தலைமையில் மத்திய அமைச்சரை சந்தித்தனர்.
அப்போது, தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவது குறித்து பேசப்பட்டதாகவும், இலங்கை கடற்படையினர் வசம் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, மத்திய மீன் வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்குடன், மத்திய இணை அமைச்சர்கள் ஜார்ஜ் குரியன், எஸ். பி. சிங் பகத்
எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.