For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முதலில் அமித்ஷா... அடுத்து பிரதமர் மோடி... - தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு விசிட் அடிக்கும் பாஜக தலைவர்கள்!

11:59 AM Apr 03, 2024 IST | Jeni
முதலில் அமித்ஷா    அடுத்து பிரதமர் மோடி      தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு விசிட் அடிக்கும் பாஜக தலைவர்கள்
Advertisement

பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தமிழ்நாடு வர உள்ளனர்.

Advertisement

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 04-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

முன்னதாக அரசு நிகழ்ச்சிகள், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், தொடங்கி வைத்தல், கட்சிப் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டிற்கு 5 முறை வருகை தந்தார். இந்நிலையில் 6-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர உள்ளார்.  ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ரோட்ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.ஏப்ரல் 9-ம் தேதி மாலை 4 மணியளவில் வேலூரிலும், மாலை 6 மணியளவில் தென்சென்னையிலும் பிரதமர் மோடி ரோட்ஷோ நடத்துகிறார். ஏப்ரல் 10-ம் தேதி, நீலகிரி தொகுதி வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து, அங்கு காலை 11 மணியளவில் ரோட்ஷோ நடத்துகிறார். தொடர்ந்து நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை உள்ளிட்ட தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்ற உள்ளார்.

ஏப்ரல் 13-ம் தேதி காலை 11 மணியளவில் பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், ஏப்ரல் 14-ம் தேதி காலை 11 மணியளவில் விருதுநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று, வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் 2 நாள் பயணமாக தமிழ்நாடு வர உள்ளார். இதற்காக நாளை டெல்லியில் இருந்து மதுரை வரும் அமித்ஷா, அங்கிருந்து தேனி சென்று, அங்கு தேனி தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து ரோட்ஷோ நடத்துகிறார். பின்னர், மீண்டும் மதுரை வரும் அமித்ஷா அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

இதையடுத்து ஏப்ரல் 5-ம் தேதி, மதுரையில் இருந்து காரைக்குடி சென்று அங்கு ரோட்ஷோ நடத்துகிறார். பின்னர் அங்கிருந்து தென்காசி சென்று அமித்ஷா ரோட்ஷோ நடத்துகிறார். தென்காசி ரோட்ஷோ முடிந்ததும், கன்னியாகுமரி மாவட்டம் தக்களை செல்லும் அமித்ஷா, அங்கும் ரோட்ஷோ நடத்த உள்ளார். இந்த ரோட்ஷோக்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement