குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து - 3 பேர் உயிரிழப்பு!
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் 150 ரிங் சாலையில் அமைந்துள்ள அட்லான்டிஸ் என்ற 12 மாடி குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த கட்டிடத்தின் 6 ஆவது மாடியில் நேற்று (மார்ச்.14) காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீயில் இருந்து அதிக அளவு கரும் புகை ஏற்பட்டதால் அங்கிருந்த பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் உடனடியாக கட்டிடத்தை விட்டு வேகமாக வெளியேறத் தொடங்கினர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் படி தீயணைப்பு படையினர், விரைந்து வந்து குடியிருப்பு பகுதியில் சிக்கிய 50 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.