மதுரை ஜல்லிக்கட்டு - கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்திற்கு வெளியே தீ விபத்து!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி இன்று(மார்ச்.09) நடைபெற்றது . 11 சுற்றுகளாக் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வைத்தார். இதில் 993 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
பங்கேற்ற மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள்
என 46 பேர் காயமடைந்து அதில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து காளைகளுக்கும்,
வீரர்களுக்கும் தங்க காசு, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
உற்சாகமாக நடைபெற்ற இந்த போட்டி ஜல்லிக்கட்டு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு வெளியே இருந்த காய்ந்த சருகுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அருகில் இருந்த பணியாளர்கள் ஓய்வறையில் தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவிய நிலையில், உடனடியாக தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால்
பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் யாருக்கும் காயமும் கிடையாது. மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதால் ஜல்லிக்கட்டு அரங்கம் சிறிதுநேரம் பரபரப்புடன் காணப்பட்டது.