5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் - காவல் ஆணையர் அருண் உத்தரவு!
சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது, நோ-என்ட்ரியில் வாகனம் ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தால் ஆகிய 5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
கும்பலாக நின்று போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே அதிக அளவு விபத்துக்கள் ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் அதிக அளவிலான சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெரும்பாலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதனைத் தடுக்கும் வகையில், சென்னையில் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனையில் போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் வசூலிக்கின்றனர். அப்போது போக்குவரத்து போலீஸார் கும்பலாக நின்று வாகன சோதனையில் ஈடுபடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
இதனையடுத்து சாலைகளில் போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபடும்போது கும்பலாக நிற்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் கும்பலாக நின்று போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.