"மழைவெள்ளத்தில் மூழ்கும் நெற்பயிர்களால் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்.." - நயினார் நாகேந்திரன் கண்டனம்
திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக மழைவெள்ளத்தில் மூழ்கும் நெற்பயிர்களால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"சிதம்பரம் அருகே உள்ள பூவாலை மேற்கு கிராமத்தில், கனமழையின் காரணமாக சுமார் 750 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியிருப்பது பெருங்கவலை அளிக்கிறது. இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான பரவனாறு அருவாமுக்குத் திட்டத்தை நான்காண்டுகளாகக் கிடப்பில் போட்டுவிட்டு சமீபத்தில் அப்பணிகளைத் தொடங்கிய திமுக அரசு, ஆறுகளை முழுமையாகத் தூர் வாராமலும், தடுப்புச் சுவர் கட்டாமலும் இழுத்தடிப்பதே மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான காரணம்.
ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து நெற்பயிர்களை வெள்ளத்திலும் விவசாயிகளைக் கண்ணீரிலும் மூழ்கவிடும் திமுக அரசே இந்தப் பேரழிவிற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் "நானும் டெல்டாகாரன்தான்" என்று வெற்றுப் பெருமை பேசி வரும் முதலமைச்சர் விவசாயப் பெருமக்களை ஏமாற்றாமல், சேதமடைந்த நெற்பயிர்களை உடனடியாக ஆய்வு செய்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50,000 வீதம் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.