டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு - விவசாயிகள் மதுரையை நோக்கி மாபெரும் பேரணி!
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி, அ.வல்லாளப்பட்டி, நாயக்கர் பட்டி உள்பட 11 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஏல உரிமை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த சுரங்கம் அமைத்தால் விவசாயம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் என்பதால் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்கள், மற்றும் மறியல்கள் நடைபெற்றன. மேலும் டங்ஸ்டன் சுரங்க திட்ட போராட்டத்திற்கு வணிகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏல உரிமை ரத்து செய்வது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதன் காரணமாக மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசயிகள் சங்கம் சார்பில் மதுரை தலைமை தபால் நிலையத்தை நோக்கி நடை பயண பேரணி மேற்கொண்டனர். முன்னதாக விவசாயிகளின் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலூர் அருகே விவசாயிகள் மற்றும் வணிகர்கள் இணைந்து நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நரசிங்கம்பட்டியில் இருந்து நடைபயணத்தை தொடங்கி தல்லாகுளத்தில் நிறைவு செய்கின்றனர். தொடர்ந்து அனுமதியின்றி பேரணி நடைபெற்று வருவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது பேரணியாக செல்லும் மக்கள் மதுரை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூரில், மருந்தகம், உணவகம் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.