விவசாயிகளுக்கு ரூ.1500 கோடி வட்டியில்லா கடன்! அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு!
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு 2023-24 நிதியாண்டில் ரூ.1500 கோடி அளவில் வட்டியில்லா கூட்டுறவு கடன் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;
வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 2023-24 நிதியாண்டில், ரூ. 1500 கோடி அளவில் வட்டியில்லா கூட்டுறவு கடன் வழங்கப்படும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு நாள் டிச. 18 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு சார்ந்த தொழில்களுக்கு ரூ. 1500 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை விவசாயிகள், தொடர்புடைய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி பயனடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.