கும்பகோணம் அருகே பிரபல ரவுடி கொலை - அண்ணனை கைது செய்து போலீசார் விசாரணை!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி மெயின்ரோட்டில் வசித்து வந்தவர் பிரபல ரவுடி காளிதாஸ்(35). அவர் மீது சுவாமிமலை காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே கடந்த மாதம் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட காளிதாஸ் கடந்த வாரம் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் காளிதாஸ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு வீட்டின் முன்புறம் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சுவாமிமலை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கிட் சிங் ஆய்வு மேற்கொண்டார். காளிதாஸ் படுகொலைக்கு முன் விரோதம் காரணமா? அல்லது சொத்து தகராறா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த காளிதாஸின் அண்ணன் தேனாம்பேட்டை நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். காளிதாஸ் குடிபோதையில் குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்து வந்ததால் அவரது அண்ணன் பாண்டியன் நேற்று இரவு காளிதாஸை கண்டிக்க சென்றுள்ளார்.
அப்போது காளிதாஸ் குடிபோதையில் அண்ணன் பாண்டியனை தாக்க முயற்சி செய்த போது தற்காப்புக்காக பாண்டியன் மரக்கட்டையால் காளிதாஸை தாக்கியதில் தலையில் காயமடைந்து உயிரிழந்துள்ளார். தற்போது பாண்டியனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.