For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவை திருமாவளவன் புறக்கணித்தாக பொய் பிரசாரம் - வன்னி அரசு X தளத்தில் பதிவு!

03:11 PM Dec 05, 2024 IST | Web Editor
‘அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவை திருமாவளவன் புறக்கணித்தாக  பொய் பிரசாரம்   வன்னி அரசு x தளத்தில் பதிவு
Advertisement

‘அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும் புத்தக வெளியீட்டு விழாவை விசிக தலைவர் திருமாவளவன் புறக்கணித்துவிட்டதாக சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர் என விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

“ சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரைக் கொள்கை ஆசான்களாக ஏற்றுக்கொண்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் களமாடி வருபவர் திருமாவளவன். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட பெண்கள் மற்றும் தலித்களின் விடுதலைக்காகவும் சமரசமின்றி அவர் பாடுபட்டு வருகிறார். தேர்தல் புறக்கணிப்பு காலத்தில் எப்படி தீவிரத்துடன் சனாதனத்தை எதிர்த்தாரோ அப்படித்தான், தேர்தல் பாதைக்கு வந்த பிறகும் களமாடி வருகிறார்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் சனாதனத்தை எதிர்த்து நிற்பது விசிகதான். அப்படிப்பட்ட பேரியக்கத்தை வழி நடத்திவரும் எமது தலைவரை யாரும் பின்னிருந்து வழி நடத்திட முடியாது. சிலர் அப்படி முயற்சிக்கிறார்கள். நாளை டிசம்பர் 6 அன்று நடக்கவிருக்கும் ‘அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், திமுக கொடுத்த நெருக்கடியால்தான் எங்கள் தலைவர் போகவில்லை என உள்நோக்கம் கற்பிக்கிறார்கள். 2001ஆம் ஆண்டு முதன் முறையாக திமுக கூட்டணியில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குப் போனார் தலைவர் திருமாவளவன் .

2003 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினமா செய்தார். பதவிதான் வேண்டுமென்றால் திமுக தலைவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு பதவியில் தொடர்ந்திருக்கலாம். ஆனால், கொள்கை முக்கியமெனப் பதவியைத் துறந்தவர் எமது தலைவர். அப்படிப்பட்டக் கோட்பாட்டு உறுதிமிக்கத் தலைவரை இழுத்த இழுப்புக்கெல்லாம் கொண்டு செல்ல முடியும் என சிலர் முயற்சிப்பது அரசியல் சோகமாகும். தமிழ்நாட்டில் சில ஊடக நிறுவனங்கள் அம்பேத்கர் பெயரை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றன. அம்பேத்கரின் கொள்கைகள் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, தங்களது அரசியல் சதி வெற்றி பெற வேண்டுமென அவர்கள் துடிக்கிறார்கள்.

அம்பேத்கர் யாத்துத் தந்த தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்புச் சட்டங்களைத் தூக்கி எறிந்து விட்டு ஊடகவியலாளர்களைப் பணி நீக்கம் செய்த ஊடக நிறுவனங்களை எதிர்த்துப் போராடாத சில முன்னாள் ஊடகவியலாளர்கள், எப்போதும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் எமது தலைவர் திருமாவளவனை சுயநலத்துக்காக வசை பாடுகிறார்கள். அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என எமது தலைவர் கூறவில்லை.

அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் சொன்னார். ஆனால் நூல் வெளியீட்டாளர்கள் எமது தலைவரைப் புறக்கணித்துவிட்டுப் பாயாசம்தான் வேண்டும் எனப் போயிருக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம். ஆனால், எங்கள் தலைவர் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பது எமது தலைவரை அவமதிப்பது மட்டுமல்ல, அம்பேத்கரையும் அவமதிப்பதே ஆகும். நூல் வெளியீட்டாளர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், அம்பேத்கரும், திருமாவளவனும் நெருப்பைப் போன்றவர்கள். அவர்களைப் பொட்டலம் கட்ட எவராலும் முடியாது.” இவ்வாறு வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement