"போலிப் பாசம் தமிழுக்கு... பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
ஒவ்வொரு ஆண்டும் சமஸ்கிருதத்திற்கு சராசரியாக ரூ.230.24 கோடியும், தமிழ் உள்ளிட்ட மற்ற ஐந்து மொழிகளுக்கு ரூ.13.41 கோடியும் மத்திய அரசு செலவு செய்துள்ளது.
இதில் தமிழ், சமஸ்கிருதத்தின் மொத்த நிதியுதவியில் 5% க்கும் குறைவாகவும், கன்னடம் மற்றும் தெலுங்கு தலா 0.5% க்கும் குறைவாகவும், ஒடியா மற்றும் மலையாளம் தலா 0.2% க்கும் குறைவாகவும் பெற்றுள்ளன. இதனால் சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்த நிலையில் சமஸ்கிருதத்துக்கு மட்டும் மிக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"சமஸ்கிருதத்திற்கு கோடிகள் கிடைக்கும்; தமிழுக்கும் மற்ற தென்னிந்திய மொழிகளுக்கும் முதலைக் கண்ணீரைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது. போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.