பெரியார் பல்கலைக்கழகத்தில் 2-வது நாளாக சோதனை... சிக்கிய முக்கிய ஆவணங்கள்!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாநகர காவல்துறையினரின் சார்பில் 7 இடங்களில் தொடர்ந்து 17 மணி நேரமாக சோதனை நடைபெற்ற நிலையில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலி ஆவணங்கள் மூலம் தனியார் நிறுவனங்களைத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மோசடி , போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 9 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பெரியார்
பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் டிச.26-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஜெகநாதனை நீதிபதி முன்பு ஆஜர் படுத்திய போது அவர் தரப்பு வழக்குரைஞர்கள் உடல் நிலை, வயது ஆகியவைகளை காரணம் காட்டி கடுமையாக வாதம் செய்தனர். தொடர்ந்து அவருக்கு சூரமங்கலம் காவல் நிலையத்தில் 7 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: “விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இந்த நிலையில், காவல் துறை சார்பில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் குடியிருப்பு, அலுவலகம், விருந்தினர் விடுதி, பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று (டிச.27) மாலை முதல் தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்ற நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக சோதனை நடைபெற்றது.
தொடர்ந்து, 17 மணி நேரத்தை கடந்து சோதனை நடைபெற்ற சூழலில் பதிவாளர் அலுவலகம், துணைவேந்தர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கிய ஆவணங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக போலீசார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.