ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை - தமிழக அரசு அறிவிப்பு!
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பொது வாழ்வைப் போற்றும் விதமாக அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (75) நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த போது சிகிச்சை பலனின்றி நேற்று (டிச. 14) காலை உயிரிழந்தார். இந்த தகவலை மியாட் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் நேற்று பிற்பகல் 1 மணியளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இதனை அடுத்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இளங்கோவனின் பொது வாழ்வைப் போற்றும் விதமாக அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் இன்று (டிச. 15) பிற்பகல் வரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் தொண்டர்கலின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மணப்பாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.