"முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் ஆண்டவனால் கூட மக்களை காப்பாற்ற முடியாது" - மயிலாடுதுறையில் இபிஎஸ் பேச்சு!
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் ஆண்டவனால் கூட மக்களை காப்பாற்ற முடியாது" - மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபுவை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர் தெரிவித்ததாவது..
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேளாண்மை அதிகம் நிறைந்த பகுதி. விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அதிமுக கொண்டு வந்தது. விவசாய கடன் தள்ளுபடி செய்தது அதிமுக ஆட்சி. ஆனால் விவசாயிகளுக்கு பசுமை வீடு திட்டம் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. தமிழக முதலமைச்சருக்கு கஷ்டம் என்றால் என்ன என்பதே தெரியாது .
அவர் வந்த பாதை வேறு , நான் வந்த பாதை வேறு என தெரிவித்தார். முதலமைச்சர் செல்வ செழிப்பிலே வாழ்ந்தவர் , கஷ்டம் என்றால் என்ன என்று உணர்ந்தவன் நான். இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. முதலமைச்சர் நானும் டெல்டாகாரன் என கூறுகிறார் ஆனால் நமக்கு தண்ணீர் முறையாக வந்து சேரவில்லை.
கர்நாடக அரசிடமிருந்து முறையான தண்ணீரை பெற்றுத்தராத முதலமைச்சர்தான் மு.க.ஸ்டாலின். டெல்டா விவசாயிகளைப் பற்றி முதலமைச்சருக்கு கவலை இல்லை.
அவருக்கு வேண்டியதெல்லாம் அதிகாரம் மட்டும்தான். இந்தியா கூட்டணி அமைத்து ஒரு பயனும் இல்லை . முதலமைச்சர் மக்களுக்காக வாழவில்லை தன் வீட்டு மக்களுக்காக அவர் வாழ்கிறார்.
மக்கள் மீது அக்கறை இல்லாத ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டில் ஆண்டு கொண்டிருக்கிறார். அதிமுக ஆட்சியில்தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிக்கப்பட்டது. திமுக அரசு ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆதரிப்பதாக முதலமைச்சர் தெரிவிக்கிறார். நாங்கள் ஆளுநரை ஆதரிக்கவில்லை. நாங்கள் கொடுத்த புகாரை ஆளுநர் விசாரித்து இருந்தால் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் தற்போது வந்திருக்கும். அதுபோலவே பாஜக மற்றும் மோடியை பார்த்தால் அதிமுக பயப்படுவதாக திமுக விமர்சிக்கிறது. நாங்கள் யாரை பார்த்து பயப்படவில்லை . முதலமைச்சரை போன்று பயந்து நடுங்குபவர்கள் நாங்கள் இல்லை.
கூட்டணியில் இருந்து உள்ளடி வேலை செய்யும் கட்சி நாங்கள் இல்லை. மயிலாடுதுறை மாவட்டத்தை பிரித்தது அதிமுக அரசு . ஆனால் நாங்கள் பெற்றெடுத்த பிள்ளைக்கு முதலமைச்சர் பெயர் வைத்துள்ளார்.” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.