“எப்படி வந்து சிக்கி இருக்கேன் பாத்தியா பா”... திருட சென்ற இடத்தில் கையும், களவுமாக சிக்கிய திருடன்... கதவை திறக்கவில்லை என்றால் உயிரை மாய்த்துக் கொள்வேன் என மிரட்டல்!
சென்னை வியாசர்பாடி பெரியார் நகர் அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் ரம்ஜான், வயது 50. இவர் தனது குடும்பத்துடன் இப்பகுதியில் வசித்து வருகிறார். தனது வீட்டின் அருகே கட்டபொம்மன் தெருவில் உள்ள தோல் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
நேற்று காலை 9 மணியளவில் வழக்கம் போல வீட்டை பூட்டிவிட்டு, வீட்டில் யாரும்
இல்லாததால் சாவியை செருப்பு வைக்கும் இடத்தில் வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். மதியம் சாப்பிடுவதற்காக 1:30 மணி அளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு திறந்து இருந்தது. வீட்டிற்குள் நுழைந்து பார்த்த போது மர்ம நபர் ஒருவர் பீரோவை திறந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
உடனடியாக வீட்டில் இருந்து வெளியே வந்த ரம்ஜான் கதவை வெளிப்பக்கமாக மூடி அருகில் இருந்தவர்களை கூச்சலிட்டு வர வழைத்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே திருடிக் கொண்டிருந்த நபர் ஓடி வந்து வெளியே வர முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. அப்போது வீட்டின் கதவை திறக்கவில்லை என்றால் மின் விசிறியில் தூக்கு மாட்டி உங்களது வீட்டில் இறந்து விடுவேன் என மின்விசிறியின் அருகில் இருந்த துணியை போட்டு மிரட்டி உள்ளார்.
உடனடியாக ரம்ஜான் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து அந்த நபரை பிடித்து செம்பியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். செம்பியம் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த நபர் வியாசர்பாடி பி.வி காலனி 29 வது தெருவை சேர்ந்த ஹசன் பாஷா வயது 25 என்பது தெரிய வந்தது. வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு வீட்டின் கதவை திறந்து இவர் திருடியது தெரிய வந்தது.
இதனையடுத்து ஹசன் பாஷா மீது வழக்குப் பதிவு செய்த செம்பியம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.