ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - நாதகவுக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதையடுத்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்தலை ஆளும் கட்சியான திமுகவை தவிர்த்து பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, தேமுதிக போன்றவை புறக்கணிப்பதாக அறிவித்தன. பாஜக, தவெகவும் புறக்கணிப்பதாக அறிவித்தன. நாதக தனித்துப் போட்டி என அறிவித்தது. தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் இன்று 3 மணிக்கு நிறைவடைந்தது.
இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் 8 பேர் தங்களின் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். திமுக சார்பில் வி.சி.சந்திரகுமாரும், நாதக சார்பில் மா.கி.சீதாலட்சுமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
58 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த 18ம் தேதி வேட்புமனு பரிசீலனை போது மூன்று வேட்பாளர்கள் மனு நிராகரிப்பு செய்யப்பட்டு 55 வேட்பாளர்கள் வேட்புமனு ஏற்கப்பட்டது. இந்நிலையில் இன்று வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 47 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்றது. அதன்படி நாதகவுக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் மைக் சின்னத்தைப் பெற்ற நாம் தமிழர் கட்சி 8.22 சதவீத வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.