ஜூலை 7 முதல் இபிஎஸ் சுற்றுப் பயணம் - அதிமுக அறிவிப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜூலை 7ம் தேதி முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் , 7.7.2025 - 21.7.2025 வரை முதல் கட்டமாக, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, சட்டமன்றத் தொகுதி வாரியாக, தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த சுற்றுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கட்சி செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த பயணத்தின் போது சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சி நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கட்சி பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்தச் சுற்றுப் பயண அறிவிப்பு வெளியிடப்படுகிறது"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.