இந்த வாரம் வெளியான படங்களில் எது பெஸ்ட்… எந்த படம் பார்க்கலாம்?
இந்த வாரம் மாஸ்க், மிடில்கிளாஸ், தீயவர் குலை நடுங்க, யெல்லோ, இரவின் விழிகள், ப்ரண்ட்ஸ் (ரீ ரிலீஸ்) ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்கள் குறித்த மினி ரிவியூ..
மாஸ்க்:
ஆண்ட்ரியாவின் சூப்பர் மார்க்கெட்டில், தேர்தல் பணிகளுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 440 கோடி பணத்தை, எம்.ஆர். ராதா மாஸ்க் அணிந்த ஒரு கும்பல் பக்கா ஸ்கெட்ச் போட்டு கொள்ளை அடிக்கிறது. ‘என் பணம் கிடைக்கவிட்டால் அவ்வளவுதான்’ என ஆண்ட்ரியாவை மிரட்டுகிறார் அரசியல்வாதி பவன். பிரைவேட் டிடக்டிவ் கவினிடம் ‘அந்த கும்பலை நீ கண்டுபிடி, 1 கோடி தருகிறேன்’ என்று டீல் பேசுகிறார் ஆண்ட்ரியா. அந்த பணத்தை கொள்ளை அடித்தது யார்? எதற்காக அதை செய்தார்கள்? அவர்களை கவின் கண்டுபிடித்தாரா? ஆண்ட்ரியாவுக்கும், பவனுக்கும் என்ன தொடர்பு? உண்மையில் ஆண்ட்ரியா யார்? இதுதான் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவான மாஸ்க் கரு.

மாஸ்க் அணிந்து கொள்ளை அடித்த கும்பலை ஹீரோ கண்டுபிடிக்கும் கதை என்றாலும், பல்வேறு லேயரில் கதையை கமர்ஷியலாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். குறிப்பாக, எத்திகல் டிடக்டிவ் ஆக வரும் கவின் கேரக்டர், அவர் பின்னணி? அவரின் காதல், குடும்பம், அவருக்கும் ஆண்ட்ரியாவுக்குமான போட்டி, சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது. கொஞ்சம் நக்கல்தனம் கலந்த நடிப்பில் கவின் ஸ்கோர் செய்து இருக்கிறார். அவருக்கும் நார்த் இண்டியன் பெண் ருஹானிக்குமான சீன்கள், அதிலும் இருவரும் பேசுகிற அந்த ‘நானும் மோகன்தான்’ டயலாக் செம. அந்த சூப்பர் மார்க்கெட், அடுத்து நடக்கும் சீன்களும் கலகல.
என்ன கிளைமாக்சில் ஹீரோவுக்கு பதில் சார்லி நின்று விளையாடியிருக்கிறார். வில்லத்தனமான, தவறான தொழில் செய்கிற வேடத்தில் வரும் ஆண்ட்ரியாவும் ஆங்காங்கே நன்றாக நடித்து இருக்கிறார். அவர் கெட்அப், கண்கள் பேசும் கோப மொழி அழகு. ஆனாலும், இன்னும் கொஞ்சம் நடித்து இருக்கலாம். கவின் மாமனராக வரும் சார்லி, ஆரம்பத்தில் அப்பாவியாக நடித்தாலும், கடைசியில் இன்னொரு முகம் காண்பிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள் படத்துக்கு வலு. வட்டிவிடுபவராக வரும் சுப்ரமணியசிவா கேரக்டர், அவர் கோபம், கவின் நண்பனாக வரும் கல்லுாரி வினோத், அப்பாவாக வரும் சந்திரன் நடிப்பு ஈர்க்கிறது.
கவின் காதலி அல்ல, படத்தில் ஹீரோயினும் அல்ல. ஆனாலும், ருஹானி சம்பந்தப்பட்ட சீன்கள், அந்த கண்ணுமுழி பாடல் அவ்வளவு கியூட். பாண்டிச்சேரி பயணம், இடைவேளை காட்சிகளில் அவரும் கலக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் பாடல்கள், பின்னணி இசை, ஆர்.டி.ராஜசேகர் கேமரா படத்துக்கு பிளஸ். கொஞ்சம் எடிட்டிங் குழப்பம், முதற்பாதி ஸ்லோ, வழக்கமான ஹீரோ, காதல், டூயட் இல்லாதது போன்ற மைனஸ் இருந்தாலும், படத்தின் விறுவிறு திரைக்கதை, கவின் கியூட் நடிப்பு, டுவிஸ்ட் நிறைந்த கிளைமாக்ஸ், பிளாஷ்பேக்கில் சொல்லப்படும் சாமானிய மக்களின் குரலுக்காக மாஸ்க் படத்தை பார்க்கலாம்.
மிடில்கிளாஸ்:
ஒரு பிரைவேட் நிறுவனத்தில் மாதம் சில ஆயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு வாடகை வீட்டில் மனைவி, 2 குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு குடும்பம் நடத்தும் முனிஸ்காந்த்துக்கு ஒரு கோடி பணம் கிடைக்கிறது. அதை செக்காக கொடுக்கிறார் பணக்கார சேட். அந்த பணத்தை கொண்டு வாழ்க்கையை மாற்றலாம் என அந்த குடும்பம் கனவு கொண்டிருக்கும் வேளையில், பெயர் நிரப்பபடாத அந்த செக் தொலைந்து போக, அதை கண்டுபிடித்தாரா முனிஸ்காந்த். பணம் கொடுத்த சேட் யார்? செக்கை தேடும் நாட்களில் முனிஸ்காந்த் என்ன கற்றுக்கொண்டார் என்பதுதான் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கிய மிடில்கிளாஸ் படத்தின் கதை.

அக்மார்க் மிடில்கிளாஸ் மக்களின் மனநிலை, பொருளாதார பிரச்னை, அவர்களின் கனவுகளை மையமாக வைத்து உணர்ச்சிபூர்வமான அழுத்தமான ஒரு படம் கொடுத்து இருக்கிறார் இயக்குனர். அந்த மிடில்கிளாஸ், நடுத்தர வயது கேரக்டரில் சிறப்பாக நடித்து இருக்கிறார் முனிஸ்காந்த். மனைவி விஜயலட்சுமியிடம் திட்டு வாங்குகிற சீனில், செக் தொலைத்துவிட்டு தவிக்கிற சீன், கிளைமாக்சில் இதுதான் வாழ்க்கை என்று உணர்கிற சீனில் கதை நாயனாக ஜெயித்து இருக்கிறார். கோபக்கார மனைவியாக வரும் விஜயலட்சுமியின் நடிப்பு, கொந்தளிப்பு படத்தை அழகாக்குகிறது.
இவர்களை தவிர, செக்கை கண்டுபிடிக்க உதவுகிற ராதாரவி, டாக்டராக வரும் மாளவிகா அவினாஷ், முனிஸ்காந்த் நண்பர்களாக வரும் கோடாங்கி, குரேஷியும் மனதில் நிற்கிறார்கள். பிளாஷ் பேக் காட்சியில் முனிஸ்காந்த் அப்பாவாக வரும் வேல.ராமமூர்த்தி ஒரு நல்ல கருத்தை சொல்கிறார். மிடில் கிளாஸ் கஷ்டங்கள், யூடியூப் ஆசை, பணத்தட்டுபாடு, கடன், கடைசியில் இந்த உலகில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று சொல்லும் திரைக்கதை டச்சிங். பாசிட்டிவ் ஆன விஷயத்தை, இந்த உலகம் எல்லாருக்குமானது, அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை விதைக்கிறது மிடில் கிளாஸ். கடைசி அரை மணி நேர படம், அப்படியொரு மன அமைதியை, திருப்தியை தருகிறது.
தீயவர் குலை நடுங்க:
தினேஷ் லட்மணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அர்ஜூன் நடித்த திரில்லர் படம் தீயவர் குலை நடுங்க. சென்னை ஈகிள் அபார்ட்மென்டில் ஒரு பள்ளி சிறுமி மாடியில் இருந்து கீழே விழுந்து இறக்கிறாள். முகம் தெரியாத மர்ம நபரால் அடுத்தடுத்து ஒரு சிலர் கொல்லப்படுகிறார்கள். இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன். பள்ளி சிறுமிக்கும், இந்த கொலைக்கும் என்ன தொடர்பு, ஸ்கூல் டீச்சரான ஐஸ்வர்யாராஜேஷ் இதில் சம்பந்தபடுகிறாரா? அந்த சிறுமிக்கு என்ன நடந்தது என்பது தான் தீயவர் குலை நடுங்க கரு.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் குழந்தைகள் மீதான தாக்குதலை, வக்கிர புத்தி ஆண்களின் ஆட்டத்தை விவரிக்கிறது இந்த கதை. தன்னிடம் படிக்கும் ஒரு சிறுமிக்காக, அவர் இறப்புக்காக ஐஸவர்யாராஜேஷ் என்ன செய்கிறார் என்ற கோணத்தில் கதை நகர்கிறது. அவரின் நடிப்பு, கிளைமாக்ஸ் சண்டை ஓகே. போலீஸ் அதிகாரி கேரக்டரில் அர்ஜூனும் தனி முத்திரை பதிக்கிறார். அந்த சிறுமி அனிகா நடிப்பு கண்ணுக்குள் நிற்கிறது. ஒரு முக்கியமான வேடத்தில் வேல.ராமமூர்த்தியும் வருகிறார். வில்லனாக ராம்குமார், லோகு வருகிறார்கள். துப்பறியும் காட்சிகள் விறுவிறுப்பு, ஐஸ்வர்யா கேரக்டர், அவர் செயல்பாடுகள் ரசிக்க முடிகிறது. ஒரு வித்தியாசமான, சமூக அக்கறை கதை. ஆனால், திரைக்கதையில் கொஞ்சம் குழப்பம், ஆகவே தடுமாறி இருக்கிறது.
யெல்லோ:
அப்பா டில்லிகணேஷ் உடல்நல பிரச்னை காரணமாக தனது மேற்படிப்பை கை விட்டு, குடும்ப சூழ்நிலை காரணமாக பேங்க் வேலைக்கு போகிறார் ஹீரோயின் பூர்ணிமாரவி. அவரின் காதலும் பிரேக்அப் ஆகிறது. வேலை பார்க்கும் பேங்கிலும் உயர் அதிகாரிகளால் மன உளைச்சல். சில நாட்கள் லீவு போட்டு கேரளாவுக்கு செல்கிறார் பூர்ணிமாரவி. அந்த பயணத்தில் அவர் சந்திக்கும் நபர்கள், சம்பவங்கள், அவர் மனதில் ஏற்படும் மாற்றங்களே யெல்லோ கதை. ஹரிமகாதேவன் இயக்கி இருக்கிறார். ஒட்டு மொத்த படத்தையும் தாங்கி பிடித்து பல இடங்களில் நடிப்பில் கலக்கியிருக்கிறார் பூர்ணிமா ரவி. குறிப்பாக, அவரின் எமோஷனல் சீன்கள், காதல், நண்பர்கள் சம்பந்தப்பட்ட சீன்கள் அழகு.

அவர் வாழ்க்கையில் வரும் நண்பர்கள், நபர்கள் கேரக்டர் பின்னணியும் கியூட். கேரளா காட்சிகள் கொள்ளை அழகு. பயணம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் கேமராமேன் அபி தனது திறமையை காண்பித்து படத்தை கலர்புல் ஆக்கி இருக்கிறார். அவரை மனம் விட்டு பாராட்டலாம். ஆனந்த் காஷிநாத் இசை அதற்கு உதவி இருக்கிறது. ஹீரோவாக வரும் வைபவ் முருகேசன் எனர்ஜி ஆக இருக்கிறார். நமீதா கிருஷ்ணமூர்த்தி, லீலாசாம்சன் அந்த பயணத்தில் வந்து நல்ல மெமரி கொடுக்கிறார்கள். ஒரு சில சீன்களில் வந்தாலும் டில்லிகணேஷ் சொல்கிற விஷயம் அழுத்தம். ஒரு பயணம் செய்ய வேண்டும்.நிறைய நண்பர்களை சந்திக்க வேண்டும். மனதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற உணர்வை தருகிறது யெல்லோ.
இரவின் விழிகள்:
சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருப்பவர்களை கொலை செய்கிறார் முகமூடி அணிந்த வில்லன். ஏற்காடு மலைப்பகுதியில் நடக்கும் இந்த விவகாரத்தில் ஹீரோ மகேந்திரன், ஹீரோயின் நீமா ரே சிக்குகிறார்கள். அவர்களை மீட்க போலீசான நிழல்கள் ரவி, சேரன் ராஜ், சிசர் மனோகர் செல்கிறார்கள். யூடியூப்பர்களான ஹீரோ, ஹீரோயினை வில்லன் கடத்தியது ஏன். இப்படிப்பட்டவர்களை கொலை செய்யும் அளவுக்கு, அவர் எப்படி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சிக்கல் ராஜேஷ், அவரே அந்த வில்லனாக நடித்து இருக்கிறார்.

இன்றைய கால கட்டத்தில் சோஷியல் மீடியா, யூ டியூப் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது. பணம், வியூஸ்க்காக சிலர் எல்லை மீறி என்ன செய்கிறார்கள். அதனால், அப்பாவிகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அழுத்தமாக சொல்கிறது கதை. அதிலும் அண்ணன், தங்கை சென்டிமென்ட் இருப்பது உருக்கம். அசார் இசை ஓகே. இன்றைய கால கட்டத்துக்கு தேவையான ஒரு விழிப்புணர்வு கதையை, கிரைம் பின்னணியில் மிரட்டலாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்
ப்ரண்ட்ஸ்:

சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, தேவயானி, வடிவேலு, ரமேஷ்கண்ணா, விஜயலட்சுமி நடித்த ப்ரண்ட்ஸ் படம், 24 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது. நேசமணி கேரக்டரில் நடித்த வடிவேலுக்காக, அவர்கள் டீம் அடிக்கும் காமெடி லுாட்டிகளுக்காக இந்த படத்தை பார்க்கலாம். விழுந்து, விழுந்து சிரிக்கலாம். விஜய், தேவயானி காதல், படத்தின் அருமயைான சாங், சூர்யா நட்பு படத்தின் பிளஸ்.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்