“எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறுவடிவம் இபிஎஸ்” - ஆர்.பி. உதயகுமார்!
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூர் அருகே பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்ட நிலையில் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்,
“என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை”. என தெரிவித்தார். இது அதிமுகவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், “எத்தனையோ வாய்ப்புகள் வந்த போதும், இயக்கம் ஒன்றுபட வேண்டும் என செயல்பட்டவன் நான். என்னை சோதிக்காதீர்கள்” எனப் பேசியிருந்தார். மேலும் நேற்றைய விழாவில் ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிசாமி பெயரை பயன்படுத்தவில்லை. இது மேலும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,
“ஜெயலலிதாவின் மறைவிக்கு பிறகு இந்த இயக்கத்தை மீட்டெடுத்து, காப்பாற்றி, இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ள எடப்பாடி பழனிசாமி, தான் சந்தித்த சோதனைகளை எல்லாம் தவுடு பொடியாக்கி, அனைவரையும் தாயை போல அரவணைத்து, இன்றைக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா மறுவடிவமாக உள்ளார். அதனால் தான் மக்கள் மீண்டும் அவருக்கு மகுடம் சூட்ட காத்து உள்ளார்கள்.
அதிமுகவிற்கு எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்தி விட முடியாது. விவேகத்துடன் செயல்பட்டு 4 ஆண்டுகள் முழு ஆட்சியையும் சிறப்பாக நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. களத்தில் மக்களை சந்தித்து உண்மையை எடுத்து சொல்வோம்.