ஒரு மூட்டை பொய்களை அவிழ்த்துக் கொட்டியுள்ளார் இபிஎஸ்..! - டிகே.எஸ்.இளங்கோவன் கடும் விமர்சனம்
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி பொய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டுவதாக திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : “ஏறத்தாழ மூன்றாண்டு காலம் முதலமைச்சர் பதவியில் இருந்து மக்களைப் பற்றி கவலைப்படாமல், தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் வளமாக்கிக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி ஒரு மூட்டை பொய்களை தனது அறிக்கை மூலம் அவிழ்த்துக் கொட்டியிருக்கிறார்.
மத்திய பாஜக அரசு ஜி.எஸ்.டி வரி விதிப்பு, சி.ஏ.ஏ. சட்டம் என்று மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்தும், சிறுபான்மை இன மக்களை அங்கீகரிக்க மறுத்தும் சட்டங்களை நிறைவேற்றியபோது, பாஜக அரசை ஆதரித்த பழனிச்சாமி, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை குறைகூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக ஆட்சிக் காலங்களில், தமிழக வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் நிறைவேற்றியுள்ள திட்டங்களை எல்லாம் மறைத்துவிட்டு, தான் செய்ததாக கூறி வரும் எடப்பாடியை மக்கள் ஏற்கனவே ஆட்சிக் கட்டிலிலிருந்து தூக்கி எறிந்துவிட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாமல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குறை கூறினால், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து கொட்டியிருக்கிறார்.
பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதி மேலாண்மையைச் சரியாக கையாளாமல் 5.7 லட்சம் கோடி ரூபாய் கடனில் நிறுத்திச் சென்ற அதிமுக அரசின் குறைகளை, சரி செய்வதையே தற்போதைய சவாலாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி இப்படியொரு அறிக்கை வெளியிட்டிருப்பது நகைச்சுவையாக உள்ளது.
திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்த பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை குறை கூறியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தை சென்று பார்த்தால் புரியும். திமுக ஆட்சிக்காலத்தில் 2011 ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, தன்னுடைய பெயரை பொறித்துக் கொண்டது யார் என்பது தெரியும்.
எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தபோது, தன்னைப் பற்றித் தெளிவாக, அவரே தெரிவித்து விட்டார். தமிழகத்தில் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களைப் பற்றி யாரும் கவலைப்படாமல், சாதி அரசியல் நடத்துகிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது “நான் புராணங்களைப் படித்ததில்லை. அறிஞர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்” என்று, தான் அறிஞர் இல்லை என்று தன்னைப் பற்றி தானே தெளிவாக விளக்கியிருப்பதோடு, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட விடுதலைப் போரை, மகாபாரதப் போர் என்று நினைத்துக் கொண்டு பேசியிருக்கிறார். அத்துடன், ஆங்கிலயே ஆட்சிக்கு எதிராக நடந்த போர், புராணக் கதைகளில் உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இதையும் படியுங்கள் : இறுதிக்கட்டத்தில் 'தனுஷ் 50' படப்பிடிப்பு - விரைவில் பேக்-அப்..!
அவருடைய பேட்டியையும், அவருடைய அறிக்கையையும் படித்துப் பார்த்தால், அவர் யார் என்பதையும், அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அவிழ்த்துக் கொட்டிய பொய் மூட்டையைப் பற்றியும் மக்கள் தெரிந்து கொள்வார்கள்.” இவ்வாறு திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.