"2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க இபிஎஸ்-க்கு முழு அதிகாரம்" - அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் பேசுகையில், "அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அதிமுக சட்ட விதிகளின்படி துணைச் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தற்காலிக அவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு கூட்டத்தை நடத்தி தர வேண்டும் என்று முன் மொழிகிறேன்" என்றார். இதை திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிவதாக கூறினார். இதையடுத்து கே.பி.முனுசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பின்னர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,
- 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்.
- கூட்டணியில் யாரை இணைப்பது என்பது தொடர்பாக இ.பி.எஸ்-க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்.
- நீட், கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், 100 நாள் வேலையை 150-ஆக உயர்த்துவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
- வடகிழக்கு பருவமழையின்போது மக்களை காக்க தவறிவிட்டதாக திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
- கோவை, மதுரை மெட்ரோ விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்.
- முறையான தரவுகளுடன் மெட்ரோவிற்கு விண்ணப்பிக்கவில்லை என தீர்மானம் நிறைவேற்றம்.
- எல்லோருக்கும் எல்லாம் என ஆசைகாட்டி அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி வருவதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.