எண்ணூர் விபத்து - ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு மின்துறை அமைச்சர் சிவசங்கரையும், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ரக்ரியையும் உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 இலட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.