அங்கித் திவாரி விவகாரம்: டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்!
அங்கித் திவாரி விவகாரம் தொடர்பாக மேலும் சில அமலாக்கத்துறைக்கு சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளனர்.
மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை மண்டல துணை அலுவலகத்தில் பணிபுரிந்த அங்கித் திவாரி எனும் அதிகாரி திண்டுக்கல் மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் 13 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு டிஜிபியிடம் அமலாக்கத்துறை மதுரை மண்டல துணை அலுவலகத்தின் உதவி இயக்குநர் புகார் அளித்தார். அந்த புகாரில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் 35 பேர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தெரிவித்திருந்தார்.
அமலாக்கத்துறை புகாரினை விசாரிக்க தமிழ்நாடு டிஜிபி உத்தரவின் பேரில் மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் அமலாக்கத்துறை அலுவலர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கடந்த வாரம் நேரில் சம்மன் அளிக்க சென்றனர். ஆனால், அமலாக்கத்துறை அலுவலர்கள் சம்மனை பெற்றுக் கொள்ளவில்லை.
இதையும் படியுங்கள்: சபரிமலை : பாத யாத்திரை சென்ற 2 தமிழ்நாட்டு பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!
இதனையடுத்து 2-ம் முறையாக டிச.26-ம் தேதி காலை 11 மணியளவில் தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அமலாக்கத்துறை மதுரை துணை மண்டல உதவி இயக்குநர் பிரிஜேஸ் பெனிவால் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தல்லாகுளம் காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு அமலாக்கத்துறை அலுவலர்கள் இரவு வரை வராததால் அமலாக்கத்துறைக்கு 3-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் அமலக்கதுறை சார்பாக பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் இது தொடர்பாக அளிக்கப்பட்ட சம்மனில் விரிவான தகவல் இல்லை என்று அமலாக்கதுறையினர் தெரிவித்தனர்.
குறிப்பாக இந்த சம்மன் யார் அனுப்பியது என்று எங்களுக்கு தெரியவில்லை. செவ்வாய்
கிழமை (டிச.26) 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடபட்டிருந்தது.
ஆனால் எங்களுக்கு சம்மன் கிடைத்ததே செவ்வாய்க்கிழமை (டிச.26) தான் என்றும் குறிப்பிட்டு உள்ளனர். ஆதாரங்களை கேட்காமல் நேரடியாக வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பது உள்நோக்கத்தோடு இருப்பதாகவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நாங்கள் டிஜிபிக்கு அனுப்பிய கடிததத்திற்கு பதிலாக போலீசாருக்கு டிஜிபி என்ன மாதிரியான கடிதத்தை அனுப்பி உள்ளார் என்பதை இணைத்து விளக்கத்தை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பாக மீண்டும் மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.