அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரிக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்!
லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி, ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அங்கித் திவாரியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படியுங்கள்: கொடநாடு வழக்கு: நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு!
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது. இருப்பினும், 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அங்கித் திவாரியை விசாரணைக்காக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அழைத்துச் சென்றனர்.