சரித்திரத்தில் இடம்பெறும் வகையில் "என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழா - அண்ணமலை பேச்சு!
சரித்திரத்தில் இடம்பெறும் வகையில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா அமையும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணமலை தெரிவித்தார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார். இதையடுத்து, ’என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம், பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
இதையும் படியுங்கள் : தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை - அரசியல் கட்சிகள் வலியுறுத்தியது என்ன?
"என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு எழுச்சி விழாவாக இருக்கும். 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்பு தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் மாற்றம் கிடைத்திருந்தாலும் இந்த மாநாட்டிற்கு பிறகு முக்கிய அரசியல் மாற்றம் நிகழும். இந்த எழுச்சி விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வர உள்ளனர். தேசியம் மற்றும் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை உள்ள மக்களை கொண்ட கோவை நாடாளுமன்றத் தொகுதியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
திருப்பூரில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்கள் திருப்பத்தை தந்து இருக்கிறது. அது போன்று என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.
"என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழாவிற்காக வரும் பிப் 27, 28 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். மேலும், சரித்திரத்தில் இது போன்ற நிகழ்வு நடந்திருக்காது என்பதற்குச் சான்றாக என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா அமையும்"
இவ்வாறு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.