இமானுவேல் சேகரன் நினைவு தினம் - பொது போக்குவரத்து மாற்றம்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 7000திற்கும் மேற்பட்ட போலீசார்கள் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அனைத்து அரசியல் கட்சியினர் சமுதாய தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட நவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு பரமக்குடி போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வெறுச்சோடி காணப்படுகிறது. மேலும் பொது போக்குவரத்திலும் இன்று மட்டும் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் இதர கனரக வாகனங்கள் திருவாடானை, காளையார் கோவில், சிவகங்கை,வழியாக செல்ல வேண்டும். கமுதி, முதுகுளத்தூர் செல்லும் வாகனங்கள் சாயல்குடி ஈசிஆர் வழியாக செல்லவும், எக்காரணம் கொண்டும் பரமக்குடி பார்த்திபனூர் வழியாக செல்ல அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் பொது போக்குவரத்தும் மற்றும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சொந்த வாகனங்களில் வருபவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே வர வேண்டும். இரு சக்கர வாகனங்கள் டிராக்டர், டாடா ஏஸ் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.