“தமிழ்நாட்டில் யானைகள் தாக்கி 61 பேர் உயிரிழப்பு” - மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தகவல்!
தமிழ்நாட்டில் யானைகள் தாக்கி 61 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வனத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் உறுப்பினர் ஜோஸ்.கே.மணி விலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பது குறித்து எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய வனத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளதாவது;
“வனவிலங்குகளிடமிருந்து மக்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை மத்திய வனத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
மேலும் 2023-2024 நிதியாண்டில் மட்டும் யானைகள் தாக்கியதில் தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களில் 628 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 61 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தில் 154 பேர் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் கடந்த ஆண்டில் தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களில் புலிகள் தாக்கி 82 பேர் உயிரிழந்ததாகவும், இதில் தமிழ்நாட்டில் ஒருவர் எனவும் தெரிவித்துள்ளார்.