For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மின்சார சட்ட மசோதா : மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் - இராமதாஸ் வலியுறுத்தல்

மின்சார சட்டத் திருத்த வரைவு மசோதாவால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்காத வகையில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
06:41 PM Nov 19, 2025 IST | Web Editor
மின்சார சட்டத் திருத்த வரைவு மசோதாவால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்காத வகையில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
மின்சார சட்ட மசோதா   மத்திய  மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்   இராமதாஸ் வலியுறுத்தல்
Advertisement

பாமக நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியாவில் 2003-ல் கொண்டு வரப்பட்ட மின்சார சட்டத்தில் மின் விநியோகத்துறையை சீர்திருத்தும் வகையில் மின் விநியோகத்துக்கான கட்டமைப்பை வலுப்படுத்துவது, அரசு - தனியார் இடையே போட்டியை உருவாக்குவது, இழப்புகளை சந்தித்திருக்கும் மின்வாரியங்களை மீட்டெடுப்பது, விவசாயிகள் மற்றும் தகுதி வாய்ந்த மின் நுகர்வோருக்கு வழங்கப்படும் மானியங்களைப் பாதுகாப்பது போன்ற அம்சங்களுடன் திருத்தங்கள் செய்து மின்சார சட்டத் திருத்த வரைவு மசோதா கொண்டு வருவதற்கான முன்னெடுப்புகளை மத்திய அரசு தற்போது தொடங்கியிருக்கிறது. இந்த சூழலில் மின் நுகர்வோருக்கும், மானியங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என எழுந்திருக்கும் அச்சம் கட்டாயம் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

Advertisement

மின்சாரத் துறையில் நாடு தன்னிறைவுடன் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில்" விக்சித் பாரத் 2047" உடன் இந்த மசோதா இணைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஏற்கனவே 2014, 2018, 2020, 2021, 2022 ஆண்டுகள் என 5 முறை இந்த மின்சார சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவதற்கான முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டது. ஆனால் அந்தக் காலகட்டங்களில் எழுந்த எதிர்ப்பு காரணமாக முயற்சிகள் கைவிடப்பட்டது. தற்போது ஆறாவது முறையாக அந்த முயற்சி நடைபெறுகிறது.

தற்போது பெரும்பாலான மாநிலங்களில் மின் விநியோகமானது அரசு நடத்தும் மின் விநியோக நிறுவனங்கள் அல்லது வாரியங்கள் (டிஸ்காம்) மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களின் மேற்பார்வையின் கீழ் அரசு மற்றும் தனியார் வாரியங்கள் (டிஸ்காம்) இரண்டும் ஒரே பகுதியில் மின்சாரம் வழங்க அனுமதித்து இத்துறையை போட்டிக்கு திறந்து விட இந்த மசோதா முன்மொழிவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இது மத்திய, மாநில அரசுகளுக்கான பொதுப் பட்டியலில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களைத் தனியாருக்கு விற்கும் முயற்சி என்கிற பேரய்யம் அனைத்து மாநிலங்களுக்கும் உள்ளது. மின்சாரத் துறையில் ஏற்கனவே பெரும்பகுதி உற்பத்தி தனியாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது போல, மின் விநியோகத்தையும் கொடுப்பதற்கான நடவடிக்கைகளாக அமைந்து விடக்கூடாது.மேலும் இந்த மசோதா இரயில்வே மற்றும் தனியார் உற்பத்தி தொழில்களுக்கான மின்சாரத்தின் விலையை 20 விழுக்காடு குறைப்பதாகவும், வீட்டு நுகர்வோருக்கான மின்கட்டணம் 80 விழுக்காடு உயர்வு ஏற்படுவதற்கும் வழி வகுப்பதாகத் தமிழ்நாடு மின் பொறியாளர்கள் அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.

இழப்பில் இயங்கிவரும் மின் வாரியங்கள் மீட்கப்பட வேண்டும் என்பதிலும், மின் விநியோகம் முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனாலும் எவ்வகையான திருத்தங்கள் கொண்டு வந்த போதிலும் ஏழை, நடுத்தர நுகர்வோர்கள் கட்டண உயர்வாலோ, மானிய விலையில் மின்சாரம் பெறும் விவசாயிகள், ஏழைகள், சிறு குறு தொழில் நிறுவனங்களோ பாதிக்கப்படக்கூடாது. மின் துறையை சீரமைக்கின்ற அதே நேரத்தில் மாநில உரிமைகள் பாதிக்காத வகையிலும், மக்களின் நலன்கள் பாதுகாக்கின்ற வகையிலும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement