25 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் - பாஜக முன்னிலை !
25 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளும் எண்ணப்படுகின்றன.
தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பரவலாக பாஜக முன்னணி வகிக்கிறது. 543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, பாஜக கூட்டணி 292 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் 233 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பின்னர் மற்ற கட்சிகள் 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதனுடன் 25 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, பீகார் மாநிலம் அஜியான் தொகுதியில் இடதுசாரி முன்னிலை வகிக்கிறது. குஜராத் மாநிலம் விஜபூர், போர்பந்தர், மனவதர், கம்பத், வகோதியா, ஆகிய தொகுதிகளிலும், ஹரியானாவின் கர்னல் தொகுதியிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
ஹிமாசலப் பிரதேசத்தின் கக்ரேட், குத்லேஹர் தொகுதிகளிலும், தெலங்கானாவில் செகந்திராபாத் தொகுதியிலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. திரிபுராவின் ராம்நகர் தொகுதியில் பாஜக முன்னிலை வகிக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் தட்ரூல் தொகுதியில் பாஜக வேட்பாளர் அரவிந்த் குமார் சிங் முன்னிலையில் உள்ளார். தமிழ்நாட்டின் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு லக்னெள, துத்தி ஆகிய தொகுதிகளில் பாஜகவும், கெயின்சாரி தொகுதியில் சமாஜ்வாதியும் முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்கத்தின் பாகபங்கோலா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் பெற்றுள்ளது. இதே மாநிலத்தின் பாராநகர் தொகுதியில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. 25 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.