“இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகளை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது” - பிரதமர் மோடி உரை!
இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்களை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், நாடும் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று (ஏப். 14) டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை “சங்கல்ப் பத்ரா” என்ற பெயரில் பிரதமர் மோடி வெளியிட்டார். இவ்விழாவில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.
பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியானது@BJP4India | @BJP4TamilNadu | #PMModi | #BJP | #BJPManifesto | #LokSabaElection2024 | #Elections2024 | #INDIA | #ElectionsWithNews7Tamil | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/AA3mWC9VwY
— News7 Tamil (@news7tamil) April 14, 2024
'மோடியின் உத்தரவாதம்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் 14 தலைப்புகளில் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவருக்கு, முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசின் திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளுக்கு தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்திலும் பயனடைந்த தலா ஒரு பயனாளிக்கு தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. உஜ்வாலா, ஜல் ஜீவன், விவசாய காப்பீடு என ஒவ்வொரு திட்ட பயனாளிகளுக்கும் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி மேடையில் பிரதமர் மோடி பேசியதாவது,
“வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடனான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகள். பாஜக மீது லட்சக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைத்து கருத்துகளைத் தெரிவித்தனர். கடந்த கால தேர்தல் வாக்குறுதிகளை கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இந்த 'சங்கல்ப் பாத்ரா' என்ற பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்களை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் கனவை நனவாக்குவோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) நடைமுறைப்படுத்துவதற்கான வரலாற்று நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம். இதன் மூலம், தகுதியானவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். பாஜக அரசு மருந்து பொருட்களுக்கு 80% தள்ளுபடி அளித்து வருகிறோம்.
மானிய விலையில் கேஸ் சிலிண்டர் கொடுத்து வருகிறோம். அடுத்த கட்டமாக அனைத்து கிராமங்களுக்கும் பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். புதிய மின் உற்பத்தி மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் விநியோகிக்க உள்ளோம். 25 கோடி ஏழைகளை ஏழ்மையிலிருந்து எனது தலைமையிலான அரசு மீட்டெடுத்திருக்கிறது. இலவச ரேஷன் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும். இளைஞர்களின் கனவை நனவாக்க பணியாற்றுகிறோம். தீர்வுகளை பற்றி மட்டுமே நாங்கள் பேசுகிறோம்
தமிழ்மொழி வளர்ச்சித் திட்டம் - திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும். இந்தியாவின் கவுரவமான தமிழ்மொழி வளர்க்கப்படும். மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் திருநங்கைகள் இணைக்கப்படுவர். நாடு முழுவதும் மாணவர்களுக்கு அடையாள எண் வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் விடப்படும். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். 70 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் பயன்பெறலாம். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் நீட்டிப்பு. 2025ம் ஆண்டு பழங்குடியின ஆண்டாக கொண்டாடப்படும்” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.