“பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது” - மஜக தலைவர் தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு!
பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தமிமுன் அன்சாரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மனிதநேய ஜனநாயக கட்சி இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளது. தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரியை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் இந்தியா
கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவளிக்கிறது.
புலம்பெயர்ந்து அங்கு சென்று வாழ்ந்து வரும் தமிழ்நாடு மக்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் இருப்பதன் காரணமாக அவர்கள் மூலமாக இந்திய கூட்டணிக்கு ஆதரவு. அங்கும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சியினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார்கள்.
பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மட்டும் கேட்ட சின்னங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு சின்னங்கள் தர மறுக்கப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி தனக்கு சாதகமான உள்ள மாநிலங்களுக்கு ஒரு தேர்தல் தேதியையும், சாதகம் இல்லாத மாநிலங்களுக்கு இன்னொரு தேதி என அறிவித்துள்ளது.
கட்சியில் தகுதியான ஆட்கள் இல்லாதது போல, ஆளுநரை ராஜிநாமா செய்ய வைத்து
தேர்தலில் போட்டியிட வைப்பது என்பது ஆரோக்கியமற்ற செயல். அதே
நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த தொகுதிக்கு
இடைத்தேர்தல் நடைபெறும் போது செலவழிக்கப்படும் மக்கள் வரிப்பணம்
வீணாகப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது மாவட்ட செயலாளர் ராயல் ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.