#RainAlert | இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழை காரணமாக தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதற்கிடையே, வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டி உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நாளை (நவ.23) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படியுங்கள் : #TNGovtHoliday | 2025-ம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு… மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா?
இதனால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.