5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!
5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 60). இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சாலையில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது குறித்து சிறுமியின் தாயார் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் ஈஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்தது. விசாரணையில் ஈஸ்வரன் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு போக்சோ சட்டதின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து போலீசார் ஈஸ்வரனை சிறையில் அடைத்தனர்.