கல்வி விருது விழா | தவெக தலைவர் விஜய்க்கு சீமான் வாழ்த்து!
அதிக மதிப்பெண் எடுத்த மாணவ - மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவித்த தவெக தலைவர் விஜய்க்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 10, +2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் இன்று பரிசளித்தார். தவெக சார்பில் 2வது ஆண்டாக நடைபெறும் இந்த கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க காலை முதலே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வருகை தந்தனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் முதல் கட்டமாக நடைபெறும் இந்த விழாவில் 800க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவ - மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவித்த தவெக தலைவர் விஜய்க்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
“கல்வி என்பது மானுட உரிமை. அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை. கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை. ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார்மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம் போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது.
பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவிகளை அழைத்து, பாராட்டுச் சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை!
ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற…
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) June 28, 2024