அமித்ஷா : செங்கோட்டையன் சந்திப்பு குறித்து எந்த தகவலும் இல்லை - தம்பிதுரை!
நாட்டின் துணைக் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. காலை முதலே இரு அவைகளிலிருந்தும் எம்.பி.க்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். வாக்கு செலுத்தியபின் அ.தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் மு.தம்பிதுரை டெல்லியில் செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியது,
”அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாக்களித்தோம். தற்போது இருக்கக்கூடிய சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார். அதிலும் குறிப்பாக தமிழர் ஒருவர் வெற்றி பெறுவார். தி.மு.க சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாக்களித்திருக்க வேண்டும். மிகப் பெரிய பதவியான துணை குடியரசு தலைவர் பதவிக்கு பின் தங்கிய சமுதாயத்தில் இருந்து ஒரு தமிழர் தேர்ந்தெடுக்கப்பட அவருக்கு வாக்களிக்க வேண்டும். ஆனால் தமிழர் ஒருவருக்கு திமுக ஆதரவை தராதது வருத்தமளிக்கிறது. சி.பி.ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ் அடிப்படையாகக் கொண்டவர் கனிமொழி உள்ளிட்டோ கூறினர். ஆனால், இதே சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் திமுக உதவியுடன் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். வாஜ்பாய் , அத்வாணி முரளி மனோகர் போன்றவர்களும் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்டவர்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்திருந்த நிலையில் தற்போது தி.மு.க சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஆதரவு அளிக்காதது ஏற்றுக்கொள்ள முடியாது. என்றார்.
தொடர்ந்து ஓ.பி.எஸ் ஆதரவாளரான நானாளுமன்ற உறுப்பினர் தர்மர் இன்று சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஆதரவு அளித்து குறித்து பேசிய தம்பிதுரை ”நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அ.தி.மு.க.வில் தான் உள்ளார். அ.தி.மு.க என்றால் அது எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் உள்ளது” என்றார்.
அடுத்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான செங்கோட்டையன் சந்திப்பு குறித்து பேசிய தம்பிதுரை, ”செங்கோட்டையன் தனது பேட்டியில் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. கட்சியில் இருப்பவர்கள் மட்டுமே அதிமுகவினர். வெளியில் சென்றவர்கள் குறித்து எந்த கருத்தும் கூற முடியாது. இன்று கூட நாடாளுமன்றத்தில் அமித்ஷா வை சந்தித்து பேசினேன் , அப்பொழுது கூட செங்கோட்டையன் உடன் அவர் சந்திப்பு குறித்து என்னிடம் எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை. அதிமுகவில் இருந்து வெளியேறி தலைவர்களை பாஜக தலைமை அல்லது அமித் ஷா அழைத்து பேசினால், அது குறித்து எனக்குப் தெரியாது . அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா இல்லையா என எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. மாற்றுக் கட்சித் தலைவரை செங்கோட்டையன் சந்தித்தார் என ஆதாரப்பூர்வமாக எனக்கு எந்தத் தகவலும் இல்லை” என்றார்.