“அரசு ஊழியர்களுக்கு திமுக எதுவும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்” - திமுக விமர்சனம்...
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக திமுக அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறி நீலிக் கண்ணீர் வடிப்பதாகவும், திமுக அரசு ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் போற்றிப் பாதுகாத்து வருவதாகவும் அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“2019-ம் ஆண்டு ஜனவரி திங்கள் 25-ம் நாள் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாங்கும் ஊதியத்தைச் சொல்லி ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளமா எனக் கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கேவலப்படுத்தினார். அவருடைய ஆட்சியில் போராடிய அரசு ஊழியர், ஆசிரியர்களைப் பார்த்து, “அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா?” என்று கேட்டு, ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் கொச்சைப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி.
ஆனால், இன்றைக்கு அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கிறார். இப்போது, ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக இந்த அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறி நீலிக் கண்ணீர் வடிக்கிறார். ஆனால், திமுக அரசு எல்லாக் காலத்திலும் ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் போற்றிப் பாதுகாத்து வருகிறது. அரவணைத்து வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 19 ஆண்டுகால முதலமைச்சர் பொறுப்பில் 4 முறை ஊதியக் குழுக்களை அமைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்களை வழங்கி அரசு ஊழியர் ஆசிரியர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளார். இதனை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நன்றாக அறிவார்கள். அதனால், அவர்கள் இந்த அரசுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள். ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உதவ வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் நோக்கம் அல்ல.
ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சி அமையும் காலங்களில் பழிவாங்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தண்டனைகளை ரத்து செய்து மீண்டும் அவர்களுக்கு வாழ்வளித்து வந்துள்ளதும் திமுக அரசுதான் என்பதனை யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை. 1988 வரை குறைவான சம்பளம் பெற்று வந்த ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக 1989இல் ஊதியங்களை உயர்த்தித் தந்தது திமுக அரசு தான்”
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.