கோவையில் நடைப்பயிற்சியின் போது மக்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்று பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.ஜெயராம் மற்றும் அம்மன் அர்ஜூனர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "2024 - 25 உபரி வருவாய் கிடைத்த நிலையிலும் திமுக அரசு கடன் வாங்கியுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.
மேற்கொண்டு அனைத்து அணைகளிலும் அதிமுக ஆட்சியின்போது குடிமராபத்து பணியின் மூலம் அணைகளில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டோம். ஆனால் திமுக அரசு ஆட்சி அமைந்ததும் அணைகள் புனரமைக்கப்படவில்லை, சிறுவாணி அணையும் புனரமைக்கப்படாமல் இருப்பதாக குற்றம் சாட்டினர்.
தேர்தல் அறிக்கையின் படி நான்கு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாக திமுக அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் அவர்கள் நான்கு ஆண்டுகளில் 50,000 பேருக்கு தான் வேலை வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதியின் படி திமுக அதனை நிறைவேற்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.